கண்ணியம் காக்க கரம் கோர்ப்போம்! (Let us Join Hands to Protect Dignity!) – Sundaresan Velliangiri

By Sundaresan Velliangiri

The story was written by the author in Tamil. The English translation has been done by Team Embed-Dignity.

இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ‘மூன்றாம் அடுக்கு வகை’  நகரத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவன் நான்! எனது சிறுவயதில், உயர் சாதியினரால் மிகவும் கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டிருக்கிறேன். மேலும் பலர் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளானதையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். எனது சிறுவயதில், என்னுடன் தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த,  உயர் வகுப்பாக கருதப்படும் சமூகத்தைச் சார்ந்த சக மாணவனின் வீட்டிற்கு சென்றிருந்த போது,  வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டது, சில வீடுகளுக்கு எனது தாத்தா, பாட்டியரோடு சென்றிருந்த போது, தேங்காய் சிரட்டை மற்றும் தனி குவளைகளில் தேனீர் வழங்கப்பட்டது, உயர் வகுப்பினரின் வீட்டு  விழாக்களின் போது, பசியால் வாடிய போதும், கடைசிப் பந்தி வரை காக்க வைக்கப்பட்டு மீதமான உணவு பறிமாறப்பட்டது என, என்னுடைய  சிறுவயது அனுபவங்கள் ஏராளம்! அந்த வயதுகளில் , எனக்கு அவையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தோன்றவில்லை! ஆனால், விபரம் தெரிய தொடங்கிய பிறகு,  இவையெல்லாம் எத்தகைய ‘கண்ணியக் குறைவான அணுகுமுறைகள்’ என்று நினைத்து மிகவும் வருந்தி இருக்கிறேன். அவை இன்னமும் ஆறாத வடுக்களாக எனக்குள்  இருந்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற பல அவமதிப்பபுகள் எனக்கும், எனக்கு தெரிந்தவர்களுக்கும் பலமுறை நடந்திருக்கிறது. வளர்ந்து பெரியவன் ஆன போது, கல்வி கற்பதில், படித்து முடித்த பிறகு வேலைவாய்ப்பு பெறுவதில், வேலை கிடைத்தவுடன் பணியிடங்களில், தொழில் முனைவோர் ஆனதற்கு பின், மூலப் பொருட்களை பெறுவதில் தொடங்கி, ஆட்களை பணியமர்த்துவது, அவர்களிடம் வேலை வாங்குவது, உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வது, விற்ற சரக்குகளுக்கு பணம் பெறுவது, கொடுக்கல், வாங்கலில் ஏற்பாடு பிரச்சினைகளுக்கு மூன்றாம் நபர் மூலம் தீர்வு காண்பது என அனைத்து நிலைகளிலும், நேரடியாகவோ, மறைமுகவோ, ஜாதிய ரீதியிலான புறக்கணிப்புகளுக்கு நான் ஆளாக்கப்பட்டிருக்கிறேன். இவை எனக்குள் ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தி, தாழ்வு மனப்பான்மை உருவாக காரணமாக அமைந்தது!

கடுமையான மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அப்போது, எந்தவித பாகுபாடும் பார்க்காமல், அனவரையும் சமமாக நடத்தும், ‘சகஜ மார்க்கம்’ எனும் உலகளாவிய அமைப்பில் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1994-ம் ஆண்டு, இந்த மார்க்கத்தில் இணைந்த பிறகு எனது வாழ்க்கைப் போக்கு மாறியது! எந்தவொரு கட்டணமும் இல்லாமல் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட தியானப் பயிற்சியும், குருநாதரின் போதனைகளும், மூத்தவர்களின் அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல்களும் எனக்குள் மகத்தான மாற்றங்களை உருவாக்கின. தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை வலுப் பெற்றது. புதிய வழிகள் தென்பட்டன. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வணிக வாய்ப்பு கிடைத்தது.  அங்கு கொடுக்கப்பட்ட சர்வதேச தரத்திலான பயிற்சிகள் எனக்குள் இருந்த திறன்களை வெளிக்கொண்டு வந்தன.

தற்போது, எனது தனித்துவம் என்ன என்பதை உணர்ந்து, எனது இலக்கை அடையும் வகையில், அதை மேலும் மெருகூட்டி, துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டு, திட்டமிட்ட பாதையில் கவனமாக  பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல்வேறு வாய்ப்புகள் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. என்னை நிராகரித்தவர்கள் கூட தற்போது அங்கீகரிக்க தொடங்கி உள்ளனர். ஒருகாலத்தில் என்னை வாசலில் நிறுத்தி வைத்தவர்கள், தற்பொழுது அவர்கள் வீட்டு உணவு மேஜையில் அமர வைத்து உணவு பரிமாறுகின்ற அளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒருவர், தனது அறிவு மற்றும் ஆற்றல்களை வளர்த்துக் கொண்டு, உழைப்பின் மூலம் முன்னேற்றம் அடைந்தால், பணக்காரர் என்கிற சமூக அங்கீகாரத்தை பெற முடியும்! ஆனால், பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவராக அறியப்பட்ட ஒருவர், தனது அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வதில் தொடங்கி, உழைப்பை வெளிப்படுத்துவது, பிறரது ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை பெறுவது, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பது என அனைத்து நிலைகளிலும் ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. அனைத்து சவால்களையும் சமாளித்து, உயர்ந்த வளர்ச்சி நிலைகளை எட்டினாலும், அவ்வளவு எளிதாக சமூக அங்கீகாரம் பெற்று விட முடியாது!

கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான முன்னுரிமை, நாகரீக வளர்ச்சி, தனிமனித மாற்றம் போன்ற காரணங்களால், விளிம்பு நிலை மக்கள் பலரும் அடுத்தடுத்த நிலைகளுக்கு நகரத் தொடங்கி உள்ளனர். பாகுபாடுகளுக்கு எதிரான அரசாங்கத்தின் தண்டனை சட்டங்கள் போன்றவற்றால், கண்ணியக்குறைவான நடவடிக்கைகள் பொதுவெளிகளில்  சற்று குறைந்துள்தே தவிர, முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை! இது, சமூக மட்டத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி, மனிதகுல மேம்பாட்டிற்கு பெரும் சவாலாக இருந்து கொண்டிருக்கிறது

சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், தங்களது அறிவாற்றலையும், திறன்களையும் வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னேறிச் செல்ல திட்டமிட வேண்டும். எதிர்ப்படும் தடைகள் எதுவாயினும் அவற்றை தகர்த்தெறியும்  துணிச்சலை வளர்த்துக் வேண்டும். சமூக உயர்வு பெற்றவர்கள், பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டோர் மற்றும் அடித்தட்டு நிலையில் உள்ளவர்கள் எவரையும் கண்ணியக் குறைவாக நடத்தாமல், அவர்களது அறிவாற்றலையும், திறமையையும் அங்கீகரித்து, சமூக தளங்களில் அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறிச் செல்வதற்கு ஊக்கமும், வாய்ப்பும் அளிக்க வேண்டும்.

 

Let us Join Hands to Protect Dignity!

I was born in the most backward class in a ‘third tier’ town in south India!  In my childhood, I was treated very disrespectfully by the upper caste people.  I have also witnessed many more people being subjected to such discrimination. For instance, as a child, when I went to the house of a fellow student who was studying with me in primary school and was upper caste, I was stopped at the door of his house. When I visited some houses with my grandfather and grandmother, I remember tea served on a coconut shell because they would not give us tea in the cups they used at home. Even when we were invited to some ceremonies of upper caste people,  we were made to wait and served the leftover food after everyone else had their food.   It did not seem like a big deal in those ages! It was normalized. But after I became aware of caste-based indignities, I have felt extremely anguished and sad at the treatment me, my family and numerous others from our caste have faced over the years. I still have scars of those indignities which have not healed.

I have experienced many such insults while growing up – during education,  while searching for employment,  in the workplace as soon as I got a job,  in hiring people and managing them, after becoming an entrepreneur, in selling manufactured goods,  receiving money for the goods sold, resolving issues and in all trade arrangements – I have been subjected to caste-based discrimination.  These caused deep anguish in me and created a feeling of inferiority complex!

When I was struggling to get rid of severe stress and an inferiority complex, I had the opportunity to join the ‘Sahaja Margam’, a global mediation organization that treats everyone equally, without discrimination.  In 1994, I got the opportunity to join this organization.  My life course changed after joining!   Meditation was taught there at no cost. The teachings of the organization created immense changes within me. The inferiority complex reduced, and self-confidence was strengthened.  New avenues appeared. I got the business opportunity of a multinational company as an independent distributor.  They gave me various training and brought out the skills within me. I have also gained societal recognition. After realizing my uniqueness, I am further developing field-specific knowledge, and treading carefully along the planned path. As a result, various opportunities are coming towards me.  Those who once stopped me at the door because of my caste have now changed to the extent that they invite me to sit at the dining table of their home and serve me food.

While social hierarchies like caste are hard to overcome, there is a possibility of changes occurring at some point economically.  That is to say, if a marginalized person develops his/her knowledge and abilities and progresses through labor, can at least gain some social and economic recognition. Due to reasons like education, priority for marginalized groups in education and jobs, development of society, regulations, and mindset transformation, many marginalized people are succeeding in their life. But societal discrimination has not ended!

As my story illustrates, discrimination can still be seen in many places, across work and non-work settings.  Such practices have various societal implications and have been a significant challenge for the betterment of humankind. Thus, those who are socially uplifted should not discriminate against anyone based on their birth or economic status. Every person should be recognized and encouraged for their talent and given the opportunity to move forward and succeed in society.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *